சங்கீதம்39tam_tcv

பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்.

1நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து,என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன்.கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை,நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.”2நான் பேசாமல் ஊமையாயிருந்தேன்,நலமானதையும் பேசாமல் இருந்தேன்.ஆனால் என் வேதனை அதிகரித்தது;3என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது;நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது;அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்:
4“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும்,என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்;என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும்.5என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்;எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது;பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும்எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.
6“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்;அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும்,அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான்.
7“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது.8என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்;என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும்.9நான் மவுனமாயிருந்தேன்;நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன்.10உமது வாதையை என்னை விட்டகற்றும்;உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன்.11பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது,நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்;நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே.
12“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்;என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம்.என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே,நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும்,குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன்.13நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே,நான் திரும்பவும் மகிழும்படியாய்,உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”