சங்கீதம்104tam_tcv
1என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்;மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.2யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்;அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார்.3அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்;அவர் மேகங்களைத் தமது தேராக்கி,காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார்.4அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும்,நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.5அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்;அது ஒருபோதும் அசைக்கப்படாது.6உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்;வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது.7ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது;உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது.8அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி,பள்ளத்தாக்குகளில் இறங்கி,நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.9அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்;அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது.10அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்;அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது.11அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன;காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன.12ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன;கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன.13அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்;பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது.14அவர் மந்தைகளுக்காகப் புல்லையும்,மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார்,அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்:15மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும்,அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும்,அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார்.16யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்குநல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார்.17அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன;கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன.18உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும்,செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.19காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்;சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும்.20நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது;காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன.21சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன;இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன.22சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன;அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன.23அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்;மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.24யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை!அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்;பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது.25அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு;பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்காவாழும் உயிரினங்கள் அங்கே உண்டு.26அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன;நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும்.27நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்றுஅவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன.28நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது,அவை சேகரித்துக்கொள்கின்றன;நீர் உமது கரத்தைத் திறக்கும்போது,அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன.29நீர் உமது முகத்தை மறைக்கும்போது,அவை திகைக்கின்றன;நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட,அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன.30நீர் உமது ஆவியை அனுப்புகையில்,அவை படைக்கப்படுகின்றன;நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.31யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக;யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக.32அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது;மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன.33நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்;நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.34நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது,என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.35ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக;கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள்.என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி.அல்லேலூயா.