யோபு16tam_tcv

யோபு பேசுதல்

1அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:2“நான் இதுபோன்ற அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்;நீங்கள் எல்லோரும் துன்பத்துக்குள்ளாக்கும் தேற்றரவாளர்கள்!3காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா?உங்களை இப்படித் தொடர்ந்து பேசவைப்பது என்ன?4நீங்கள் என் நிலையில் இருந்தால்,என்னாலும் உங்களைப்போல் பேசமுடியும்;நான் உங்களுக்கு விரோதமாய்ச் சிறந்த சொற்பொழிவாற்றி,உங்களுக்கு எதிரே என் தலையை ஏளனமாய் அசைக்கவும் முடியும்.5ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன்,என் உதடுகளிலிருந்து வரும் ஆறுதல் உங்கள் துன்பத்தை ஆற்றும்.
6“நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது;பேசாவிட்டால் அது அகன்று போவதுமில்லை.7இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்;என் குடும்பத்தையும் நீர் பாழாக்கிவிட்டீர்.8நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது;என் மெலிவு எனக்கு விரோதமாக எழுந்து சாட்சி கூறுகிறது.9இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து,என்னைப் பார்த்து தமது பற்களை கடிக்கிறார்;என் எதிரி தமது கண்களால் என்னை கூர்ந்து பார்க்கிறார்.10மனிதர் என்னைக் கேலிசெய்யத் தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்;ஏளனத்துடன் என்னைக் கன்னத்தில் அறைந்துஎனக்கு விரோதமாய் ஒன்றுகூடுகிறார்கள்.11இறைவன் என்னைத் தீய மனிதரிடம் ஒப்புக்கொடுத்து,கொடியவர்களின் பிடிக்குள் என்னை சிக்கவைத்தார்.12நான் நலமாய் இருந்தேன், அவர் என்னைச் சிதறடித்தார்;அவர் என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கினார்.அவர் என்னைத் தமது இலக்காக ஆக்கினார்;13அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்திஎனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார்.14திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி,ஒரு போர்வீரனைப்போல் என்னைத் தாக்குகிறார்.
15“நான் துக்கவுடையைத் தைத்து என் உடலுக்குப் போர்த்தினேன்;என் மேன்மையைப் தூசியில் புதைத்தேன்.16என் முகம் அழுகையால் சிவந்து,என் கண்கள் இருளடைந்தது;17இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை;என் ஜெபம் தூய்மையானது.
18“பூமியே என் இரத்தத்தை மூடி மறைக்காதே ;என் கதறல் ஒருபோதும் ஓய்ந்து போகாதிருக்கட்டும்!19இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது;எனக்காக வழக்காடுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.20என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது,எனக்காகப் பரிந்துபேசுகிறவர் என் சிநேகிதர்.21ஒருவன் தன் சிநேகிதனுக்காகப் பரிந்துபேசுகிறதுபோல,அவரும் மனிதனுக்காக இறைவனுடன் பேசுகிறார்.
22“நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு,இன்னும் சில வருடங்களே இருக்கின்றன.